Tuesday, May 10, 2011

அந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (3)

பாரிசில் சாப்பிட்ட முதல் மதிய உணவு அவ்வளவு திருப்தியாக இல்லை. வட இந்தியர்களால் இயங்கும் உணவு விடுதி என்பதாலும், பிரெஞ்சுகாரர்கள் வாடிக்கையாளர்கள் என்பதாலும், காரம், மணம் குறைவாக இருந்தது.  அந்த ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், அன்புடன் அதிக செலவு செய்து விருந்தளித்த என் பிரெஞ்சு நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

தமிழ் நாட்டைவிட்டு வெளிநாட்டிற்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலானதால் நமது ஊர் சாப்பாட்டிற்கு மனம் ஏங்கியது.

பாரிஸ் வந்த முதல் நாளே ஈஃபில் கோபுரத்தை பார்க்க விரும்பியதால், அங்கு என்னை அழைத்துச்சென்றர்கள். முழுவதும் இரும்பாலேயே கட்டப்பட்ட அந்த கோபுரம் நான் எதிபார்த்ததை விட பெரியதாகவே இருந்தது. நெடும்பயணத்தின் சோர்வாலும், நேரமின்மையின் காரணத்தாலும் அன்று உயரே செல்ல முடியாத நிலையில் மீண்டும் ஒருமுறை தரையில் இருந்தபடியே வானம்தொட்ட கோபுரத்தின் உச்சியைப் (கோபுரக் கலசம் என்றே சொல்லலாம்) பார்த்தேன். அப்பொழுது எனக்குத் தோன்றிய உணர்வு விந்தையானது. அந்த இரும்பு நங்கையின் கலசம், தரையிலிருக்கும் என்னை நோக்கி தாழ்ந்து, என்னை அணைத்துக்கொண்டது  போல உணர்தேன். மீண்டும் சந்திப்போம் என்று ஈபல் கோபுரதிற்க்கு விடை கொடுத்தேன்.

அப்பொழுது எனக்குத் தெரியவில்லை, இந்த நங்கையை சுற்றிச் சுற்றிதான் என் வாழ்க்கை அமையப்போகிறது என்று.
அடுத்து பாரிசின் ஒரு முக்கியமான இடத்தை நோக்கி நகர்ந்தோம்.அருகில் ஓடும் சீன் ( La Seine ) நதிக்கரை ஓரமாக நடக்க ஆரம்பித்தோம். என் நினைவலைகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு கவிஞர்களும், ஓவியர்களும் இந்நதியைப்பற்றி எழுதியவைகளும் வரைந்தவைகளும் கண் முன் வந்தன. இருபதாம் நூற்றாண்டில் எடுத்த அமெரிக்கன் இன் பாரிஸ் (An American in Paris) மற்றும் இரண்டாம் உலகப்போரில் நடந்த உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எர்னஸ்ட் ஹெம்மிங்வே (Ernest Hemmingway) எழுதிய "போரே நீ போ" (Farewel to arms) திரைப்படங்களின் முக்கிய காட்சிகள் என் விழித்திரையில் ஓடின.வீட்டிற்குத் திரும்புகையில் பிரெஞ்சு அதிபர் மாளிகை வழியாக வரும்பொழுது அதை சுட்டிக்காட்டி இதுதான் உன் பக்கத்துவீடு என்றும்,  அடுத்த வாரம் வேறு ஒருவர் இந்த மாளிகைக்கு குடிவரலாம் என எனது நண்பர் கூறினார்.

அடுத்த ஞாயிறு ( மே 10, 1981)ஆம் நாள் அன்று பிரான்சிற்கு புதிய சகாப்தமே தொடங்கப்போகிறது என்று அப்பொழுது அறியாதவனாய் என் வீடு வந்து அடைந்தேன். மாலை 6 மணிக்குத் திரும்ப வந்து வேறு ஓர் இடத்திற்கு கூட்டிச்செல்வதாக என் நண்பர்கள் விடைபெற்றனர். முதல் நாளே பல ஆச்சரியங்களை சந்தித்து விட்டதால் அடுத்து வருவது, ஓர் ஆச்சரியமாகத்தான் இருக்கும், என்ற எண்ணத்துடன் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஓய்வு எடுக்க என் அறை நோக்கிச் சென்றேன்.


தொடரும்Friday, May 6, 2011

அந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (2)

எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோருக்குப் பிறந்து,  ஏழ்மையில் வளர்ந்து,  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  இளங்கலைப் படிப்பை முடித்து, புதுச்சேரியில் முதுகலைப் படிப்பு 
(பிரெஞ்சு இலக்கியம்) படித்துக்கொண்டிருந்த வேளையில் கல்லூரி விடுதியில் சேர முடியாததால்,  ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன். வருடம் 1975.  வாடகை ரூபாய் 25.

புதுவை ஆரோவிந்தோ ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார வட இந்தியருக்குச் சொந்தமான வீடு இது (கான்டீன் தெரு). வீட்டின்  நுழைவாயிலில் இரும்பாலான ஒரு பெரிய  கதவு. கதவைத்திறந்து உள்ளே வாகனங்கள் நிறுத்த இடவசதி உண்டு. அந்த இடத்தின் அருகே எனது ஏழைக்குடில்.

இந்த வீட்டின் பெரும் பகுதியில் ஒரு வயதான வடஇந்திய தம்பதியர் வசித்து வந்தனர். பாதுகாப்பு காரணமாக இரவு ஒன்பது மணிக்கு அந்தப் பெரிய கதவு உட்பக்கமாக தாழிடப்படும். 
புதுவையில் உள்ள பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் தன் விலை உயர்ந்த ( RAAJDOOT ) மோட்டார் சைக்கிளை நிறுத்துவார்.  ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடித்த "பாபி" என்ற படத்தில் வரும் அதே சிகப்பு நிற வண்டி. அன்று புதுவையில்  இந்த வண்டி அவனிடம் மட்டும்தான் இருந்தது. அதனால் பெண்கள் மத்தியில் இவன் பிரபலம்.


பல இரவுகளில் பெண்களுடன் ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வருவான். அவன் எப்பொழுது வந்தாலும்  கதவைத்திறந்து விடுவது என்னுடைய நிலை. அவன் ஒருபொழுதும் மருந்துக்குக்கூட நன்றி சொல்லியதில்லை.  காலச்சக்கரம் சுழன்றது.

ஐந்து வருடங்களுக்குப்பிறகு, பாரிஸ் வந்த முதல் நாளில், இந்திய உணவு விடுதியில் நுழைந்தபோது, புதுவையில் நான் யாருக்கு கதவைத்திறந்து விட்டேனோ, அவன் எனக்கு கதவத் திறந்துவிட்டான். பின்பு அவனே எங்களுக்கு உணவு பரிமாறினான்.  அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவனை சங்கடப்படுத்த வேண்டாமென்று, நானும் காட்டிக் கொள்ளவில்லை. போகும்பொழுது அவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.

அன்று இரவு மற்றுமொரு இனிய ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

தொடரும் 

  

Tuesday, May 3, 2011

அந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (1)

தமிழ் இணைய உலகில் புது நட்புகளை உருவாக்கிக்கொள்வது எப்பொழுதுமே அலாதியானது. இணைய நட்பை நேரில் சந்திக்கும் மகிழ்ச்சி அதைவிட அலாதியானது. நண்பர் வினையூக்கியை சில தினங்களுக்கு முன்னர் பாரிஸில் வரவேற்று இல்லத்திற்கு அழைத்து வரும்பொழுது 30 வருடங்களுக்கு முன்னர் நான் முதன்முதலில் பாரிஸிற்கு வந்த நினைவுகள் மலர்ந்தன.

மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும்பொழுது, "நீங்கள் ஏன் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கக்கூடாது" என வினையூக்கி கேட்டார். நண்பர் ஓசை செல்லா கூட நீண்ட காலமாக என்னிடம் இதையே வலியுறுத்திக்கொண்டிருந்தார். பணிச்சூழல் காரணமாகத் வலையுலக முயற்சியைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் மே மூன்றாம் தேதி,  பிரெஞ்சு தேசத்தில் நான் காலடி வைத்த தினமான இன்றே, என் அயல் தேசத்து அனுபவங்களை  பதியத் துவங்குகின்றேன்.

கல்லூரி காலம் தொட்டு பிரான்சு கனவு தேசம் ஆனாலும், படிப்பும் வாழ்க்கையோட்டமும் என்னை டாலர் தேசத்திற்கே முதலில் கூட்டிச்சென்றது.  1981 ஆம் வருடம், வசந்த காலக் காற்றை சுவாசித்துக்கொண்டே, பாரிஸில் காலடி எடுத்து வைக்கின்றேன்.

ஈஃபிள் கோபுரத்தை தூரத்தில் கண்கொண்டு. சைன் நதிக்கரையில் கலை இலக்கிய ரசனையை நினைவில் பிணைத்துக்கொண்டு, எனக்கான தங்குமிடத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்த பொழுது என் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சி என் கண்களிலும் பேச்சிலும் தெரிந்ததை, அமெரிக்காவில் சந்தித்த பிரெஞ்சு தம்பதியர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தனர்,

யுனெஸ்கோவில் பயிற்சிப் பெற, பாரிஸ் வந்த எனக்கு மேற்சொன்ன பிரெஞ்சு தம்பதியினர்தாம் இலவசமாக, ஆனாலும் மிகுந்த வசதியுடன் கூடிய அரண்மனையின் இணைப்பாக இருந்த இல்லம் ஒன்றில் இடம் கொடுத்தனர், நான் தங்கவைக்கப்பட்ட இடத்தின் வலது பக்கத்தில் பிரெஞ்சு அதிபரின் மாளிகை, இடது பக்கம் அமெரிக்க தூதரின் இல்லம்.

பண்பாட்டு காலாச்சார அடையாளங்களுடன் நவ நாகரிக ஆடையலங்கார கடைகளையும் கொண்டிருந்த உலகப்புகழ்பெற்ற இந்தத் தெருவின் பெயர் Rue du Faubourg Saint Honoré.

உலகப் புகழ் பெற்றவர்களையும் பணக்காரர்களையும் இந்தத் தெருவில் சர்வசாதரணமாகப் பார்க்கலாம் என்று கூறிய  பிரெஞ்சு தம்பதியினர் மதிய உணவிற்காக, அருகில் இருந்த இந்திய உணவகத்திற்குக் கூட்டிசென்றனர்,

அங்கும் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது,

தொடரும்

 
Powered by Blogger