Tuesday, May 10, 2011

அந்த நாள் ஞாபகம் நினைவிலே ... (3)

பாரிசில் சாப்பிட்ட முதல் மதிய உணவு அவ்வளவு திருப்தியாக இல்லை. வட இந்தியர்களால் இயங்கும் உணவு விடுதி என்பதாலும், பிரெஞ்சுகாரர்கள் வாடிக்கையாளர்கள் என்பதாலும், காரம், மணம் குறைவாக இருந்தது.  அந்த ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், அன்புடன் அதிக செலவு செய்து விருந்தளித்த என் பிரெஞ்சு நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.

தமிழ் நாட்டைவிட்டு வெளிநாட்டிற்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலானதால் நமது ஊர் சாப்பாட்டிற்கு மனம் ஏங்கியது.

பாரிஸ் வந்த முதல் நாளே ஈஃபில் கோபுரத்தை பார்க்க விரும்பியதால், அங்கு என்னை அழைத்துச்சென்றர்கள். முழுவதும் இரும்பாலேயே கட்டப்பட்ட அந்த கோபுரம் நான் எதிபார்த்ததை விட பெரியதாகவே இருந்தது. நெடும்பயணத்தின் சோர்வாலும், நேரமின்மையின் காரணத்தாலும் அன்று உயரே செல்ல முடியாத நிலையில் மீண்டும் ஒருமுறை தரையில் இருந்தபடியே வானம்தொட்ட கோபுரத்தின் உச்சியைப் (கோபுரக் கலசம் என்றே சொல்லலாம்) பார்த்தேன். அப்பொழுது எனக்குத் தோன்றிய உணர்வு விந்தையானது. அந்த இரும்பு நங்கையின் கலசம், தரையிலிருக்கும் என்னை நோக்கி தாழ்ந்து, என்னை அணைத்துக்கொண்டது  போல உணர்தேன். மீண்டும் சந்திப்போம் என்று ஈபல் கோபுரதிற்க்கு விடை கொடுத்தேன்.

அப்பொழுது எனக்குத் தெரியவில்லை, இந்த நங்கையை சுற்றிச் சுற்றிதான் என் வாழ்க்கை அமையப்போகிறது என்று.




அடுத்து பாரிசின் ஒரு முக்கியமான இடத்தை நோக்கி நகர்ந்தோம்.அருகில் ஓடும் சீன் ( La Seine ) நதிக்கரை ஓரமாக நடக்க ஆரம்பித்தோம். என் நினைவலைகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு கவிஞர்களும், ஓவியர்களும் இந்நதியைப்பற்றி எழுதியவைகளும் வரைந்தவைகளும் கண் முன் வந்தன. இருபதாம் நூற்றாண்டில் எடுத்த அமெரிக்கன் இன் பாரிஸ் (An American in Paris) மற்றும் இரண்டாம் உலகப்போரில் நடந்த உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எர்னஸ்ட் ஹெம்மிங்வே (Ernest Hemmingway) எழுதிய "போரே நீ போ" (Farewel to arms) திரைப்படங்களின் முக்கிய காட்சிகள் என் விழித்திரையில் ஓடின.



வீட்டிற்குத் திரும்புகையில் பிரெஞ்சு அதிபர் மாளிகை வழியாக வரும்பொழுது அதை சுட்டிக்காட்டி இதுதான் உன் பக்கத்துவீடு என்றும்,  அடுத்த வாரம் வேறு ஒருவர் இந்த மாளிகைக்கு குடிவரலாம் என எனது நண்பர் கூறினார்.

அடுத்த ஞாயிறு ( மே 10, 1981)ஆம் நாள் அன்று பிரான்சிற்கு புதிய சகாப்தமே தொடங்கப்போகிறது என்று அப்பொழுது அறியாதவனாய் என் வீடு வந்து அடைந்தேன். மாலை 6 மணிக்குத் திரும்ப வந்து வேறு ஓர் இடத்திற்கு கூட்டிச்செல்வதாக என் நண்பர்கள் விடைபெற்றனர். முதல் நாளே பல ஆச்சரியங்களை சந்தித்து விட்டதால் அடுத்து வருவது, ஓர் ஆச்சரியமாகத்தான் இருக்கும், என்ற எண்ணத்துடன் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஓய்வு எடுக்க என் அறை நோக்கிச் சென்றேன்.


தொடரும்







1 comments:

Unknown said...

அடுத்த பகுதியை சீக்கிரம் வெளியிடுங்கள் அவா மேலிட காத்துக்கொண்டிருக்கும் தங்கள் ரசிகன்.

Post a Comment

 
Powered by Blogger